பெய்ஜிங்: கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க சீனாவில் உள்ள பல பெரிய நகரங்கள் கட்டுப்பாடு
களைக் கடுமையாக்கியுள்ளன.
சீனாவில் மில்லியன் கணக்கானோருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வார இறுதி வரை வீட்டிலேயே இருக்கும்படி தலைநகர் பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள ஹேபேய் மாநிலத்தில் ஏறத்தாழ நான்கு மில்லியன் பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து, அதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
துறைமுக நகரமான தியேன்ஜின்னில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணியிலிருந்து கூட்டாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அந்த நகரில் 51 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்ட 51 பேருக்கும் இலேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
2.5 மில்லியன் குடியிருப்பாளர்
களைக் கொண்ட லோங்ஹுவா மாவட்டத்தில் பொழுதுபோக்கு நிலையங்களும் மொத்த வர்த்தகச் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. பலர் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு 24 மணி நேரத்துக்குள் கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று மக்கள் நிரூபிக்க வேண்டும்.
உணவகங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டுமே உணவகங்களில் அனுமதிக்கப்படுவர். இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வரும் சனிக்கிழமை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

