செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
25a3c9f4-f32b-4833-bc24-1d802443edfe
-

நெருங்கும் பிரியாவிடை; போராடி வெல்லும் குணம் தளரவில்லை

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் (படம்) தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கப் பொது விருதுப் போட்டிக்குப் பிறகு ஓய்வுபெறுவார் என்று நம்பப்படுகிறது.

இதனால் 23 முறை கிராம் ஸ்லாம் பட்டம் வென்ற செரினா விளையாடுவதை நேரில் காண முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், குத்துச்சண்டை சகாப்தம் மைக் டைசன், பிரபல நடிகர்கள் உட்பட 23,000க்கும் மேற்பட்டோர் மைதானத்தில் திரண்டனர்.

ஓய்வுபெறும் காலம் நெருங்குவதாகக் கூறப்படும்போதும் செரினா வில்லியம்சிடம் உள்ள போராடி வெல்லும் குணம் கடுகளவும் குறையாமல் உள்ளது. டென்கா கொவினிச்சை அவர் போராடி வீழ்த்தியது இதற்குச் சான்று.

ஜொலிக்கும் ஆடையுடன் களமிறங்கிய செரினா 6-3, 6-3 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மலேசியாவுடனும் வியட்னாமுடனும் மோத இருக்கும் சிங்கப்பூர்

பேங்காக்: ஆசியான் காற்பந்துச் சம்மேளனப் போட்டியில் எந்ததெந்தக் குழுக்கள் எந்தெந்த பிரிவுகளில் இடம்பெறும் என்பதை நிர்ணயிப்பதற்கான குலுக்கல் முறை நேற்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்றது.

இதில் மலேசியா, வியட்னாம், மியன்மார், லாவோஸ் ஆகிய குழுக்களுடன் சிங்கப்பூர் பி பிரிவில் இடம்பெறுகிறது.

ஏ பிரிவில் நடப்பு வெற்றியாளர் தாய்லாந்து, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், கம்போடியா, புருணை அல்லது திமோர் லெஸ்டே ஆகிய குழுக்கள் இடம்பெறுகின்றன.

போட்டியின் புதிய பிரதான ஆதரவாளர் மிட்சுபிஷி எலெக்ரிக். முதல் சுற்று ஆட்டங்களில் குழுக்கள், சொந்த மண்ணிலும் எதிரணியில் விளையாட்டரங்கத்திலும் விளையாட இருக்கின்றன. இப்போட்டி வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

ஏமாற்றத்திலிருந்து மீண்டு வந்த லோ கியன் இயூ

தோக்கியோ: அண்மையில் உலகப் பூப்பந்து வெற்றியாளர் போட்டியின் காலிறுதியில் தோற்று தமது வெற்றியாளர் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறிய சிங்கப்பூர் வீரர் லோ கியன் இயூ, ஜப்பான் பொது விருதுப் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நேற்று சீனாவின் சாவ் ஹுன்பெங்கை 21-15, 21-9 எனும் ஆட்டக்கணக்கில் வீழ்த்தினார்.

இதன் மூலம் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு லோ தகுதி பெற்றுள்ளார். அதில் அவர் இந்தியாவின் எச்.எஸ் பிரனோய் அல்லது ஹாங்காங்கின் அங்குஸ் இங்கைச் சந்திப்பார்.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள தென்கொரிய வீராங்கனைகளை மலேசிய வீராங்கனைகளான பெர்லி டானும் எம். தீனாவும் 16-21, 21-14, 21-18 எனும் ஆட்டக் கணக்கில் தோற்கடித்தனர்.

போர்ன்மத் நிர்வாகி பதவி நீக்கம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூலிடம் போர்ன்மத் அண்மையில் 9-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து, போர்ன்மத் நிர்வாகி ஸ்கோட் பார்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை போர்ன்மத்துக்கு ஆற்றிய பணிகளுக்கு அக்குழுவின் உரிமையாளர் மெக்சிம் டெமிம் நன்றி தெரிவித்தார்.

ஆனால் குழுவின் தரம் தொடர்ந்து மேம்பட புதிய நிர்வாகிக்கான தேடல் உடனடியாகத் தொடங்கும் என்றார் அவர்.