சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று காலையிலேயே பெருகியது பக்தர்கள் கூட்டம். ஈராண்டுகளுக்குப் பிறகு கூட்டம் நிறைந்த இவ்வாலயத்தில் விநாயகரைக் குடும்பத்தோடும் நண்பர்களோடும் பக்தர்களால் நேரடியாக மனநிறைவோடு வழிபட முடிந்தது.
பலரும் விரும்பிச் செல்லும் ஆலயமாகத் திகழும் இதில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கு 108 முறை விநாயகர் சன்னதியை வலம் வரும் வழக்கமும் உண்டு.
இவ்வாண்டு ஸ்ரீ சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மட்டுமல்லாமல் 6,000 தேங்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பெரும் விநாயகர் சிலையும் விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு அம்சமாக அமைந்தது.
இந்து அறக்கட்டளை வாரியத்தில் சுமார் 30 ஆண்டுகளாக தொண்டூழியராக இருக்கும் ராஜகாந்தம் கணேசன், "ஒவ்வோர் ஆண்டும் ஐந்து மணிக்கே ஆலயத்திற்கு வந்து பூஜைக்கு தேவைப்படும் உதவியை செய்து வருகிறேன். கொண்டாட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நானும் மற்ற சிலரும் கொழுக்கட்டை தயார் செய்வோம், பக்தர்களுக்கு பால்குடங்களை விற்கவும் சில ஏற்பாடுகளைச் செய்ய உதவுவோம்," என்றார்.
விநாயகர் சதுர்த்தியன்று எல்லாரையும் போலத் தானும் காலையில் எழுந்து, வீட்டு சாமி அறையிலிருக்கும் விநாயகருக்கு உணவும் பலகாரங்களும் படைப்பதாகக் கூறினார், இல்லத்தரசியான ஷீலா கோபாலகிருஷ்ணன்.
"கொவிட்-19 கிருமித்தொற்றால் சென்ற ஈரரை ஆண்டுகளாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்நாள் பாதுகாப்பு நடைமுறைகளால் பரபரப்பின்றி இருந்தாலும், இவ்வாண்டு மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது," என்று அவர் முகம் மலரச் சொன்னார்.
லோயாங் துவா பெக் கோங் ஆலயத்தில் 16 விநாயகர் சிலைகளுக்கு இன்று சிறப்பு சந்தன அலங்காரமும் செய்யப்பட்டது.
சீனர்களும் இந்தியர்களும் இங்கு விநாயகரை வழிபடுவது பல்லாண்டுகால வழக்கமாகவிட்டது.
பௌத்த, தௌயிஸ்ட், இந்து சமயங்களைச் சேர்ந்த தெய்வங்களின் சிலைகளும் இஸ்லாமிய 'கிராமாத்'தும் உள்ள இவ்வாலயம், 1980களில் முதன்முதலில் ஒரு குடிசையாக இருந்தது.
தீ விபத்தில் இக்குடிசை அழிந்துபோனதால் புதிய ஆலயம் ஒன்று பொதுமக்களின் நன்கொடைத் தொகையைக் கொண்டு கட்டப்பட்டது.
ஆலயம் இருந்த நிலத்தில் குத்தகைக் காலம் நிறைவடைந்த காரணத்தால் அது 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோயாங் வேக்கு இடம் மாறியது.
ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டும் விநாயகர் சதுர்த்தியும் துவா பெக் கோங் ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
மாதங்கி இளங்கோவன்

