'ஏக்கர்ஸ்' எனும் விலங்கு நல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பு இவ்வாண்டு அதன் 21ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
ஒரு மாதத்தில் தனது விலங்குப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக சுமார் 100,000 வெள்ளி செலவழிக்கிறது 'ஏக்கர்ஸ்'. அத்தகைய திட்டங்களைத் தக்கவைக்க உதவவும் ஆதரிக்கவும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் நிதி திரட்டும் விருந்தை நடத்தி வருகிறது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி, மாலை ஆறு மணியளவில் ஒன் ஃபேரர் ஹோட்டலின் 'கிராண்ட் பால்ரூம்' அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த விருந்து, 'எனிமல்ஸ் மேட்டர்', அதாவது விலங்குகள் முக்கியம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது.
கொவிட்-19 நிலவரத்தால் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு இவ்விருந்து நடத்தப்படுகிறது. நிதி நன்கொடைகள் மற்றும் ஏலங்களின் மூலம் சுமார் 170,000 வெள்ளி திரட்டுவது இலக்கு.
"இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்கவிருக்கும் இந்த நிதி திரட்டும் விருந்து எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த விருந்தின் மூலம் திரட்டப்படும் நிதி எங்கள் திட்டங்களுக்கு மிகப்பெரிய ஆதாரமாகத் திகழ்கிறது. விலங்குகளுக்கான எங்கள் நம்பிக்கை மற்றும் கனவுகள் மெய்ப்பட பொதுமக்களின் ஆதரவு மிக அவசியம். பொதுமக்களின் சிறிய நன்கொடைகூட நம் திட்டங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உதவும்," என்று கூறினார் 'ஏக்கர்ஸ்' அமைப்பின் இணைத் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி பூபால்.
நடிகர் மற்றும் படைப்பாளருமான பொல் போஸ்டர் தொகுத்து வழங்கும் இவ்விருந்தின் நுழைவுச்சீட்டுகள் ஓர் இருக்கைக்கு 198 வெள்ளி மற்றும் ஒரு மேசைக்கு 1,888 வெள்ளி எனும் அடிப்படையில் விற்கப்படுகிறது. எட்டு வகையான வீகன் சைவ அறுசுவை உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களைக் கொண்ட விருந்திற்கு நுழைவுச்சீட்டுகளைப் பெற பொதுமக்கள் 'ஏக்கர்ஸ்' அமைப்பின் இணையத்தளத்தை நாடலாம்.
காயத்திரி காந்தி

