ஐக்கிய நாட்டு நிறுவனம்: சீனாவில் உய்கர் இனத்தவர் துன்புறுத்தப்பட்டனர்

1 mins read
a91463f9-f11a-45ac-aa5e-e54a78c17220
-

ஜெனீவா: சீனா­வின் சின்­ஜி­யாங் பகு­தி­யைச் சேர்ந்த உய்­கர் முஸ்­லிம்களை அந்­நாடு கொடு­மைப்­படுத்தி மனித உரி­மை­க­ளைப் பெரிய அள­வில் மீறி­ய­தாக உய­ரிய அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார். பெய்­ஜிங் வெளி­யிடாமல் தடுக்­கப்­பார்த்த ஓர் அறிக்­கை­யில் இது குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தாக அவர் சொன்­னார்.

ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் மனித உரிமை தூத­ராக டாக்­டர் மிஷெல் பஷெலே நேற்று முன்­தினம் வரை பதவி வகித்­தார். பத­விக் காலத்­தின் கடைசி சில மணி­நேரங்­களில் அவர் இந்த அறிக்­கையை வெளி­யிட்­டார்.

சீனா­வின் உய்­கர் இனத்­த­வ­ரின் உரி­மை­கள் மோச­மான, தேவை­யற்ற விதத்­தில் பறிக்­கப்­பட்­ட­தாக அறிக்கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. உய்­கர் மக்­க­ளில் பெரும்­பா­லோர் முஸ்­லிம்­கள்.

மனி­தா­பி­மா­னம் இல்­லாத கொடூ­ர­மான, கீழ்த்­த­ரமான முறை­யில் அவர்­கள் நடத்­தப்­பட்­ட­தாக நேர்­கா­ணல் அளித்த சிலர் கூறி­ய­தாக அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

தெற்கு சின்­ஜி­யாங்­கில் உள்ள இமாம் அசிம் வழி­பாட்­டுத் தலம் போன்ற இடங்­கள் இடித்­துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­தா­க­வும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

பெய்­ஜிங், ஐக்­கிய நாட்டு நிறு­வனம் உட்­பட ஒட்­டு­மொத்த உல­க­மும் சின்­ஜி­யாங்­கின் இந்­நி­லைக்­குக் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

அறிக்­கை­யின் குற்­றச்­சாட்­டு­களை சீனா மறுத்­துள்­ளது. உரிமை­கள் தொடர்­பில் சீனா­வின் சாதனை­களை அறிக்கை கருத்­தில்­கொள்­ள­வில்லை என்று அது கூறி­யது.

அறிக்கை வேண்­டு­மென்றே தன்­னைப் பற்­றித் தவ­றான தக­வல்­களை வெளி­யிட்டு அவ­தூறு கூறு­வ­தாக சீனா பதி­ல­ளித்­தது.