ஜெனீவா: சீனாவின் சின்ஜியாங் பகுதியைச் சேர்ந்த உய்கர் முஸ்லிம்களை அந்நாடு கொடுமைப்படுத்தி மனித உரிமைகளைப் பெரிய அளவில் மீறியதாக உயரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பெய்ஜிங் வெளியிடாமல் தடுக்கப்பார்த்த ஓர் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை தூதராக டாக்டர் மிஷெல் பஷெலே நேற்று முன்தினம் வரை பதவி வகித்தார். பதவிக் காலத்தின் கடைசி சில மணிநேரங்களில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
சீனாவின் உய்கர் இனத்தவரின் உரிமைகள் மோசமான, தேவையற்ற விதத்தில் பறிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உய்கர் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
மனிதாபிமானம் இல்லாத கொடூரமான, கீழ்த்தரமான முறையில் அவர்கள் நடத்தப்பட்டதாக நேர்காணல் அளித்த சிலர் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு சின்ஜியாங்கில் உள்ள இமாம் அசிம் வழிபாட்டுத் தலம் போன்ற இடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பெய்ஜிங், ஐக்கிய நாட்டு நிறுவனம் உட்பட ஒட்டுமொத்த உலகமும் சின்ஜியாங்கின் இந்நிலைக்குக் கவனம் செலுத்தவேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
அறிக்கையின் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. உரிமைகள் தொடர்பில் சீனாவின் சாதனைகளை அறிக்கை கருத்தில்கொள்ளவில்லை என்று அது கூறியது.
அறிக்கை வேண்டுமென்றே தன்னைப் பற்றித் தவறான தகவல்களை வெளியிட்டு அவதூறு கூறுவதாக சீனா பதிலளித்தது.

