ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மானிய விலையில் வழங்கப்பட்ட எரிபொருள்களின் உள்நாட்டு விலையை 30 விழுக்காடு உயர்த்து வதாக அந்நாட்டின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன்படி, மானிய விலையில் வழங்கப்படும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 7,650 ருப்பியாவில் இருந்து 10,000 ருப்பியாவாக ($0.94 வெள்ளி) உயரும். அதே சமயம் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் விலை லிட்டருக்கு 5,150 ருப்பியாவில் இருந்து 6,800 ருப்பியாவாக உயரும் என எரிசக்தி அமைச்சர் அரிஃபியா தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வு கடினமான முடிவு என்ற அதிபர் ஜோக்கோ விடோடோ, பொருளியலைச் சமாளிக்க வேறுவழியில்லை என்று சொன்னார்.
அனைத்துலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, குறைந்து வரும் ருப்பியா நாணயத்தின் மதிப்பு ஆகியவை இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும், அனைத்துலக கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து, இன்னும் அதிக நிதி தேவைப்படும் என்று நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி கூறினார்.
விலைவாசி உயர்வின் தாக்கத்தைத் தணிக்க ஏழைகளுக்கு அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கும் என்றும் அவர் சொன்னார்.
பெருமளவு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்பட்டு வந்த நிலையில், மற்ற வட்டார நாடுகளைவிட இந்தோனீசியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்தது.
அதன் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 4.69 விழுக்காடாக இருந்தது.
எரிபொருள் விலை இந்தோனீசியாவில் அரசியல் ரீதியிலான பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் மானிய விலையில் விற்கப்படும் எரிபொருளில்
80 விழுக்காட்டிற்கும் அதிகமானவை அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெர்டாமினாவைச் சார்ந்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு, குடும்பங்கள், சிறு வர்த்தகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தோனீசியாவில் கடைசியாக 2014ல் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டபோது, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

