சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இந்த வாரம் பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதை அடுத்து, ஜோகூர் பாருவில் வார இறுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சனிக்கிழமை காலையில் பல கார்கள் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்கு வரிசை பிடித்து நுழைந்தன. ஜோகூரின் கடைத்தொகுதிகள் உள்ள வட்டாரங்களிலும் உணவகங்களிலும் அதிக கூட்டம் காணப்பட்டது.
ஜோகூரில் உள்ள ஹோட்டல்களில் பெரும்பாலான அறைகளில் விருந்தினர்கள் தங்கினர். தங்கள் ஹோட்டல்களில் தங்கியோர் பலரும் சிங்கப்பூரர்கள் என்று சில உரிமையாளர்கள் கூறினர். சிங்கப்பூர் பள்ளி விடுமுறை வரும் ஞாயிற்றுக்கிழமை முடியும். இந்நிலையில் தங்கள் ஹோட்டல்களில் அன்று வரை காலி அறைகள் ஏதும் இருக்காது என்று சில ஹோட்டல்கள் எதிர்பார்க்கின்றன.
சிங்கப்பூரிலிருந்து வந்த மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதை முன்னிட்டு சில உணவகங்கள் விலைகளை ஏற்றியுள்ளன. கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதிலிருந்து வர்த்தகம் பெருகிவிட்டதாக சில உணவகங்கள் கூறின. கிருமிப் பரவலால் ஏற்பட்ட நட்டத்தை இது ஈடுகட்ட உதவும் என்று நம்புவதாக அவை கூறின.