ஃபுளோரிடா: சந்திரனுக்கு ஆளில்லா ராக்கெட் அனுப்பும் இரண்டாவது முயற்சியையும் நாசா தற்காலிகமாக கைவிட்டுள்ளது. ராக்கெட்டில் தொடர்ந்து எரிவாயு கசிவு ஏற்படுவதே அதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ஃபுளோரிடாவின் கேப் கார்னிவல் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி சனிக்கிழமையன்று பாய்ச்சப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
ராக்கெட் ஏவப்படுவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக, முயற்சியைக் கைவிடுவதாக அத்திட்ட அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக சென்ற 29ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியும் எரிவாயு கசிவு காரணமாக கைவிடப்பட்டது.
இந்தப் பின்னடைவால், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் தாமதமடையும்.
ஆளில்லா ராக்கெட்டை மீண்டும் ஏவுவதற்கான முயற்சி, இம்மாதம் 19 முதல் 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்திலோ அல்லது அக்டோபர் மாதமோ மேற்கொள்ளப்படும் என்று நாசா உதவி நிர்வாகி ஜிம் ஃபிரி சொன்னார்.

