அமெரிக்கப் பொதுவிருதை வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக்
நியூயார்க்: அமெரிக்க பொதுவிருது டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் பட்டம் வென்றார். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஓன்ஸ் ஜபேரை 6-2, 7-6 என்ற நேர்செட்கணக்கில் ஸ்வியாடெக் வீழத்தினார். அண்மையில் பிரெஞ்சு பொதுவிருது பட்டத்தையும் வென்றிருந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 3வது பட்டம் இதுவாகும்.
கார்ல்சன் விலகல்; சதுரங்க ஆட்டத்தில் ஏமாற்று வேலை என குற்றச்சாட்டுகள்
அமெரிக்க சதுரங்க விளையாட்டாளர் ஒருவர் உலகின் முன்னணி சதுரங்க வீரர் கார்ல்சனை வீழ்த்தியதைத் தொடர்ந்து, சதுரங்க விளையாட்டில் ஏமாற்று வேலை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சின்க்ஃபீல்ட் கிண்ணச் சதுரங்க தொடரின் மூன்றாவது சுற்றில், 19 வயது அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமன், 31 வயது நார்வே கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த அதிர்ச்சி தோல்வி, 53 ஆட்டங்களாக நீடித்த கார்ல்சனின் தோல்வியில்லா பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அதன் பிறகு, எந்த விளக்கமும் கூறாமல், அத்தொடரில் இருந்து விலகுவதாக கார்ல்சன் அறிவித்தார். ஆனால், 2020ஆம் ஆண்டில் காற்பந்து நிர்வாகி மொரின்யோ, "தான் எதையும் பேசவிரும்பவில்லை. பேசினால், சிக்கலாகிவிடும்," என்று பதிவிட்டிருந்த டுவீட்டை கார்ல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுடுவீட் செய்திருந்தார். காற்பந்தாட்டம் ஒன்றில் தப்பாட்டம் இருப்பதாக சந்தேகித்த மொரின்யோ இவ்வாறு கூறியிருந்தார்.
கார்ல்சனின் இந்த டுவீட்டைத் தொடர்ந்து, சதுரங்க விளையாட்டில் ஏமாற்று வேலை நடைபெறுவதாக பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
மேலும் கார்ல்சனை வீழ்த்திய நீமன், இணைய விளையாட்டு ஒன்றில் தனது நகர்வை ஆய்வு செய்ய கணினியைப் பயன்படுத்தியதற்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
நீமன் அநேகமாக ஏமாற்றியிருக்கலாம் என்று கார்ல்சன் நம்பக்கூடும் என்று சதுரங்க விளையாட்டின் 6ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா சொன்னார்.
விளையாட்டின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கார்ல்சன் ஒருபோதும் தொடரில் இருந்து விலகியதில்லை என்றும் அப்படி அவர் விலகுகிறார் என்றால் அதற்கு சரியான காரணம் இருக்கும் என்றும் அனைத்துலக சதுரங்க சம்மேளனத்தின் தலைமை இயக்குநர் எமில் சுடோவ்ஸ்கி சொன்னார்.
வலைப்பந்து: ஆசியப் பட்டத்தை இலங்கையிடம் பறிகொடுத்த சிங்கப்பூர்
சிங்கப்பூர்: ஆசிய வலைப்பந்து வெற்றியாளர் போட்டியில் இலங்கையிடம் வீழ்ந்த சிங்கப்பூர் குழு, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நேற்று நடைபெற்ற இப்போட்டியில் 63-53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வென்றது.
ஏற்கெனவே மூன்று முறை இப்பட்டத்தை வென்றிருந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக பட்டத்தை வெல்ல முடியாத ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சிங்கப்பூர் அணி, முற்பாதி ஆட்டத்தில் 30-27 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன் பிறகு, தனது தற்காப்பு ஆட்டத்தைப் பலப்படுத்திய இலங்கை, குறைந்த கோல்களையே விட்டுக்கொடுத்தது. சிங்கப்பூரின் கோல்களைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், கோல் மழை பொழிந்த இலங்கை அணி பட்டத்தைக் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு சிங்கப்பூரும் இலங்கையும் தகுதி பெற்றுள்ளன.

