உலகில் கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் வலுகட்டாயமாக வேலைக்கு வைக்கப்பட்டுள்ளனர் அல்லது தங்கள் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைப்பு கூறியது. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என அமைப்பு எச்சரித்தது.
2030க்குள் அனைத்து விதமான அடிமைத்தன போக்குகளை ஒழிப்பது நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அதற்கு மாறாக அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2016க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை பத்து மில்லியனாக உயர்ந்தது.
சென்றாண்டு நிலவரப்படி 28 மில்லியன் பேர் வலுகட்டாயமாக வேலைக்கு வைக்கப்பட்டுள்ளனர். 22 மில்லியன் பேர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு 150 பேருக்கும் ஒருவர் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொவிட்-19, பருவநிலை மாற்றம், உள்நாட்டு போர் போன்ற காரணங்களால் பலரும் வறுமை கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். நவீன அடிமைத்தனத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலைமையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் சிறுவர்களும் தான்.

