கோலாலம்பூர்: இவ்வாண்டு மலேசியப் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாக வளர்ச்சியடையும் என நிதி அமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ் நம்பிக்கையுடன் உள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் புளூம்பர்க் கருத்தரங்கில் பேசிய அவர், இரண்டாம் காலாண்டில் 8.9 விழுக்காடு விரிவடைந்த பொருளியல், மூன்றாம் காலாண்டிலும் வளர்ச்சி அடையலாம் என்று கூறினார்.
ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 5.3 விழுக்காட்டிற்கும் 6.3 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும் என்று மத்திய வங்கி கணக்கிடுகிறது. பொருளியல் வளர்ச்சி குறித்த புதிய கணிப்பு அடுத்த மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படக் கூடும் என்று அமைச்சர் ஸஃப்ருல் சொன்னார். எனினும், மற்ற நாடுகளைப்போல மலேசியாவும் பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. 1998 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு ரிங்கிட்டின் மதிப்பு பெருமளவு சரிந்துள்ளதால், மலேசியாவில் சில பொருள்களின் விலைகள் உயர்ந்து உள்ளன.
என்றாலும், ஜப்பானிய யென், தென்கொரிய வோன், பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற மற்ற நாணயங்களைவிட ரிங்கிட் சிறப்பாக செய்திருப்பதாக திரு ஸஃப்ருல் கூறினார்.
"அமெரிக்க டாலருடன் ரிங்கிட்டின் மதிப்பை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்," என்றும் அவர் சொன்னார்.

