விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
0db452f4-d7f5-4810-9511-12d42d8ea880
-
Google News Preferred Icon

ஆசிய கிண்ண கிரிக்கெட்: இலங்கை ஆறாவது முறையாக வென்றது

துபாய்: 15வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இதில் பூவா தலையாவில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பந்தடித்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இலங்கை அணி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் பனுகா ராஜபக்ச, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 116ஆக இருந்தபோது ஹசரங்கா 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய பனுகா ராஜபக்ச அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை அடுத்து 171 ஓட்டங்கள் எடுத்தால் ஆசிய கிண்ணத்தை வெல்லலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பந்தடித்தது. இலங்கை அணியினரும் பந்துவீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டுகளையும் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6வது முறையாக ஆசிய கிண்ணத்தையும் கைப்பற்றி அசத்தியது.

உலக டென்னிஸ் தரவரிசையில்

முதல் இடத்தைப் பிடித்த அல்கராஸ்

நியூயார்க்: ஸ்பெயினைச் சேர்ந்த 19 வயது இளையரான கார்லோஸ் அல்கராஸ் (படம்) நேற்று முன்தினம் நடைபெற்ற அமெரிக்க டென்னிஸ் பொது விருது இறுதிப் போட்டியில் வென்று உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த ஆக இளையவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இறுதிப் போட்டியில் அல்கராஸ், நார்வேயின் கஸ்பர் ருட்டை 6-4, 2-6, 7-6 (7-1), 6-3 என்ற ஆட்டக்கணத்தில் வீழ்த்தி விருதைக் கைப்பற்றினார். "சிறு வயதிலிருந்தே உலகின் முதல் தர டென்னிஸ் ஆட்டக்காரராக வேண்டும் என்ற எனது கனவு இப்போது நிறைவேறியுள்ளது," என்று அல்கராஸ் போட்டிக்குப் பிறகு நடத்தப்பட்ட நேர்காணலில் கூறினார். தனது சக நாட்டவரான ரஃபாயல் நடால், 2005ல் பிரஞ்சு பொது விருதை வென்று ஆக இளைய கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளர் என்ற பெருமையைப் பெற்றார். அப்போது நடாலுக்கு வயது 19. அதற்குப் பிறகு இப்போது அல்கராஸ் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.