மலேசியப் பிரதமர்: வெள்ளத்தைச் சமாளிக்க முன்னதாகத் தயாராகவேண்டும்

மலேசியப் பிரதமர்: வெள்ளத்தைச் சமாளிக்க முன்னதாகத் தயாராகவேண்டும்

1 mins read
dd191020-1bd4-45df-8e94-74e92c73e689
சென்ற ஆண்டிறுதியில் மலேசியா மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கோப்புப் படம்: இபிஏ -

பெட்டாலிங் ஜெயா: இனி வரவுள்ள மழைக்காலத்தில் மலேசியாவின் ஆறு மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பெரிய அளவில் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து நிலைமையைக் கையாள அந்நாட்டு அரசாங்கம் முன்னதாகவே ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

மாவட்ட அளவில் இயங்கும் பேரிடர் மேலாண்மைக் குழுக்களுக்கு உடனடியாகச் செயல்படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், செயல்பாட்டுச் செலவுக்காக 160 மாவட்டங்களுக்கு எட்டு மில்லியன் ரிங்கிட் (2.48 வெள்ளி) ஒதுக்கப்பட்டுள்ளது.

அதோடு, பல்வேறு மாவட்டங்களுக்கு 320 'ஃபைபர்கிளாஸ்' படகுகளை வழங்க 4.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் 1.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்குப் பாதுகாப்பு வழங்க மலேசியா முழுவதும் 6,010 தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலேசியாவின் 11 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் மலேசியாவில் 100 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பொழிந்தது.

இவ்வாண்டு நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் கிளந்தான், திரங்கானு, பாஹாங் ஆகிய மாநிலங்களில் கடும் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஜோகூர், சாபா, சரவாக் ஆகிய மாநிலங்கள் கடும் மழையால் பாதிக்கப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.