மாஸ்கோ: உக்ரேன் ராணுவத்தின் முன்களத் தற்காப்புப் படைகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அனைத்துத் திசைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி உக்ரேனியப் படைகளை நிலைகுலையச் செய்திருப்பதாக அது கூறியது.
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரேன் மீண்டும் தன் வசமாக்கி வரும் நிலையில், பெரிய அளவிலான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி இருக்கிறது.
"வான்வழித் தாக்குதல், ராக்கெட் தாக்குதல், பீரங்கிப் படைத் தாக்குதல் ஆகியவற்றை நடத்தி உக்ரேனிய ஆயுதப் படையைத் திக்குமுக்காடச் செய்துள்ளோம்," என்று ரஷ்யத் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
அண்மையில் உக்ரேனியப் படைகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, உக்ரேனின் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து, குறிப்பாக கார்கிவ் நகரிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யப் படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தது. உக்ரேனிய ராணுவப் படைகளை நோக்கி உயர்த் துல்லிய ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியது.
இது ஒருபுறம் இருக்க, ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவிணைவாதிகளும் உக்ரேனிய ராணுவத்துடன் கடுமையான சண்டையில் ஈடு
பட்டுள்ளனர்.
ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை உக்ரேனிய ராணுவ வீரர்கள் துன்புறுத்தியதாக ரஷ்யா குற்றம்
சாட்டியுள்ளது.
"பொதுமக்களை உக்ரேனிய ராணுவம் சித்திரவதை செய்கிறது," என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

