செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b32b6ff6-013e-4edc-8239-8687e23dee1f
-

அசர்பைஜான்-அர்மினியா இடையே மீண்டும் கடுமையான மோதல்

பக்கூ: அசர்பைஜானுக்கும் அர்மினியாவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக இவ்விரு நாடுகளும் உரிமை கோரும் நகோர்னோ-கரபாக் பகுதிக்காக இருதரப்பு ராணுவங்களுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது. 1980களில் இருநாடுகளும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தபோது அசர்பைஜான் வசம் இருந்த நகோர்னோ-கரபாக் பகுதியை அர்மினியா கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆறு வாரப் போரில் அப்பகுதி மீண்டும் அசர்பைஜானிடம் சென்றது. நகோர்னோ-கரபாக் பகுதியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அர்மினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் பிழைத்தோரைத் தேடும் பணியில் தொண்டூழியர்கள்

போர்ட் மொரேஸ்பி: அண்மையில் பாப்புவா நியூ கினியில் ரிக்டர் அளவில் 7.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட, காயமடைந்தோரைத் தேடும் பணியில் தொண்டூழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதுவரை ஏழு பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எலிசபெத் அரசியாருக்காக மெக்கா யாத்திரை; ஆடவர் கைது

மெக்கா: அண்மையில் காலமான எலிசபெத் அரசியாருக்காக மெக்காவில் யாத்திரை மேற்கொண்டதாகக் கூறிய ஆடவரை சவூதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த ஏமன் நாட்டு ஆடவர், மெக்காவில் உள்ள பள்ளிவாசலில் தாம் இருப்பதைக் காட்டும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். எலிசபெத் அரசியாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்ற வாசகங்களைக் கொண்ட பதாகை ஒன்றை அவர் ஏந்தியிருந்ததை அந்தக் காணொளி காட்டியது. மாண்ட முஸ்லிம்களுக்காக மெக்காவில் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபியா அனுமதி வழங்குகிறது. ஆனால் எலிசபெத் அரசியார் இஸ்லாமியர் அல்ல. அதுமட்டுமல்லாது, மெக்கா யாத்திரையின்போது பதாகைகளை ஏந்த அனுமதி இல்லை.

அமெரிக்கக் கல்லூரிகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கம்மை

நியூயார்க்: அமெரிக்கக் கல்லூரிகளில் குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் அக்கறை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை ஏறத்தாழ 20,000 பேருக்கு அந்நோய் ஏற்பட்டுள்ளது.