பத்து பகாட்: ஸ்ரீ காடிங் வட்டாரத்தின் சில பகுதிகளில் இன்று (செப்டம்பர் 14) காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து மொத்தம் 600 குடியிருப்பாளர்கள் தற்காலிக நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய 190 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நேற்று நள்ளிரவுக்குப் பிறகு 1.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்ததில் சாலைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக பத்து பகாட் மாவட்ட காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் டோலா கூறினார்.
தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடிங், பெக்கான் ஸ்ரீ காடிங் ஆகிய நான்கு பகுதிகளும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். முதலில் ஒரு பள்ளி, தற்காலிக நிவாரண நிலையமாக மாற்றப்பட்டதாகவும் பின்னர் அங்கும் வெள்ளம் ஏற்படவே பாதிக்கப்பட்டோர் அனைவரும் வேறொரு தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட மேலும் சிலரைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி தொடர்கிறது.
காவல்துறையுடன் மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை, குடிமைத் தற்காப்புப் படை, சமூக நலத்துறை, மாவட்டச் சுகாதார நிலையம் ஆகியவையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் வடகிழக்குப் பருவமழையால் ஆண்டுதோறும் கனமழை பெய்வதும் வெள்ளம் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.
இந்த ஆண்டு மோசமான பாதிப்பை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்நிலையில் இருப்பதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறுதியளித்துள்ளார்.
நாடு முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கப்படும். இவற்றில் ஒரு மில்லியன் பேர் வரை தங்க முடியும் என்றார் அவர்.

