சமர்காண்ட் (உஸ்பெக்கிஸ்தான்): உக்ரேனின் நிலைமை குறித்து சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்குக் கேள்விகளும் கவலையும் இருப்பது தமக்குப் புரிவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் பூசலின் தொடர்பில் திரு ஸி நியாயமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகவும் சொல்லி திரு புட்டின் அவரைப் பாராட்டினார்.
உக்ரேனில் நிலவிவரும் போரில் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர். போரால் உலகில் உணவு, எரிசக்தி விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இந்தப் போரே பனிப்போருக்குப் பிறகு மாஸ்கோவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே இடம்பெறும் ஆக மோசமான மோதலாகக் கருதப்படுகிறது.
உக்ரேன் போர் தொடங்கிய பிறகு இவ்விரு தலைவர்களும் முதன்முறையாக நேரில் சந்தித்தனர். ஒரு நாட்டிற்கே ஆக அதிக அதிகாரம் இருக்கும் உலகை உருவாக்க அமெரிக்கா முயற்சி எடுத்து வருவதாகவும் அதில் வெற்றியடையாது என்றும் திரு புட்டின் சொன்னார்.
திரு ஸி, திரு புட்டினைத் தமது பழைய நண்பர் என்று கூறினார்.
"உக்ரேன் நெருக்கடியைப் பொறுத்தவரை நமது சீன நண்பர்களின் நியாயமான நிலைப்பாட்டிற்கு நாங்கள் மிகுந்த மதிப்பு வழங்குகிறோம்," என்று திரு புட்டின் திரு ஸியிடம் கூறினார்.
"இதன் தொடர்பில் உங்களுக்கு இருக்கும் கேள்விகளையும் கவலையையும் நாங்கள் அறிகிறோம். இன்றைய சந்திப்பில் நிச்சயமாக எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் விவரிப்போம்," என்று திரு புட்டின் நேற்று கூறினார்.
சில நாள்களுக்கு முன்பு உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சீனாவிற்கு இருக்கக்கூடிய கவலையைப் பற்றி திரு புட்டின் முதன்முறையாகப் பேசினார்.
புட்டின்: ஸி ஜின்பிங்கிற்கு உக்ரேனின் நிலை குறித்து கவலை இருக்கிறது

