மலேசிய இந்தியர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராகப் பதவி வகித்தவருமான திரு ச. சாமிவேலு நேற்று தமது 86வது வயதில், வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.
சங்கிலிமுத்து, அங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக ஜோகூர் மாநிலத்தில் குளுவாங் நகருக்கு அருகில் இருந்த செங்கமலை ரப்பர் தோட்டத்தில் 1936ல் பிறந்த சாமிவேலு, இளம் வயது முதல் வறுமையில் வாடியவர்.
தனது ஐந்தாவது வயதில் ஜோகூர் மாநிலத்தைவிட்டு சிலாங்கூர் மாநிலத்திலிருந்த எல்மினா தோட்டத்திற்குப் பெற்றோருடன் வந்தார். பெற்றோருக்குப் பால் மரம் சீவும் வேலைகளில் உதவி செய்தார்.
கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலையில். குடும்பத்தின் வறுமை காரணமாக வேறு வழி இல்லாமல், அந்த இளம் வயதிலேயே குடும்பத்திற்கு உதவியாக வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. பத்து ஆராங்கில் உள்ள 'மலாயன் கொலிரியர்ஸ்' எனும் நிறுவனத்தில் அலுவலகப் பையனாக வேலை செய்தார்.
சாமிவேலுவின் கடின உழைப்பு மலாயன் கொலிரியர்ஸ் நிர்வாகத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அவருக்கு எழுத்தர் வேலை வழங்கப்பட்டது. அந்த வேலையில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தார்.
1951ஆம் ஆண்டில் பத்து ஆராங் நகரைவிட்டு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்த சாமிவேலு, கோலாலம்பூரில் செந்தூல் பகுதியில் உள்ள ஓர் உணவுக் கடையில் சமையல்காரருக்கு உதவியாளராகப் பணியாற்றிய பிறகு ஸ்ரீ ஜெயா நிறுவனத்தில் சேர்ந்து பேருந்து உதவியாளராக வேலை செய்தார்.
அங்கு வேலை செய்கின்ற காலத்தில் அவருக்கு வேதவனம் கட்டடக் கலைஞர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணி புரியும் புதிய வேலையும் கிடைத்தது. இந்த வேலை தான் சாமிவேலுவின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
அவரிடம் கட்டட வரைபடத் துறையில் பயிற்சியாளராகவும் சேர்ந்து தன்னுடைய கல்வி நிலையை வளர்த்துக்கொண்டார்.
திரு சாமிவேலு, 1960ஆம் ஆண்டு மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியில் (மஇக) சேர்ந்து 1974ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வுசெய்யப்பட்டார். 1979ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதியன்று திரு மாணிக்கவாசகம் மறைவிற்குப் பிறகு திரு சாமிவேலு மஇகாவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
மலேசியப் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பல்லாண்டு பொறுப்பு வகித்த திரு சாமிவேலு, 2008ஆம் ஆண்டு மலேசிய பொதுத் தேர்தலில் தமது சுங்கை சிப்புட் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள மீண்டும் களத்தில் குதித்தார்.
அப்போது தமிழ் முரசின் சார்பில் மலேசியப் பொதுத் தேர்தல் செய்தி சேகரிப்புப் பணிக்காக நான் மலேசியாவுக்குச் சென்றிருந்தபோது, சுங்கை சிப்புட் தொகுதியில் உள்ள நகர மண்டபத்தில் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழிலிருந்து நான் வந்ததை அறிந்த திரு சாமிவேலு, என்னை அழைத்து அவர் அருகே அமர வைத்து உபசரித்தார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய தமிழவேள் கோ. சாரங்கபாணியை மிகுந்த மரியாதை யுடன் நினைவுகூர்ந்த அவர், அவரது பங்களிப்புதான் இந்த இரு நாடுகளின் தமிழ்மொழி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று பெருமிதத்துடன் கூறினார்.
அந்த ஆண்டு தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் எனும் பிகேஆர் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் முடிவு அவரின் அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.
வீ. பழனிச்சாமி இணை ஆசிரியர்

