தாய்லாந்தில் பரவலாக பகிரப்பட்டுவரும் ஒரு படம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் மூவர் புதிய ஆப்பிள் ஐபோன் 14ரக தொலைபேசியை கையில் பிடித்துள்ளனர். அவர்கள் வயிற்றில் கட்டு போட்டு அதிலிருந்து இரத்தம் கசிகிறது. இந்த படத்தை பார்த்த பலர் இவர்கள் ஐபோன் வாங்குவதற்காக தங்கள் சிறுநீரகத்தை விற்றுவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டனர். இதனால் இந்த விவகாரம் குறித்து தாய்லாந்து மக்களுக்கு விளக்கம் கொடுக்க நேரிட்டது.
இந்த படம் லாவோஸ் நாட்டில் எடுக்கப்பட்டு வேடிக்கைக்காக அந்நாட்டில் பகிரப்பட்டது. ஆனால் தாய்லாந்தில் உள்ளவர்களோ இதை நிஜம் என நினைத்துகொண்டனர்.
இந்த படம் நெறிமுறையற்றது, பொருத்தமற்றது என தாய்லாந்தின் செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பு தானம் நிலையத்தின் தலைவர் குறைகூறினார். தாய்லாந்தில் உடல் உறுப்பு விற்பனை சட்டவிரோதமானது என்று அவர் விளக்கமளித்தார்.
உடல் உறுப்புகளை விற்பது சட்டத்துக்கு புறம்பானது. அதுவும் ஒரு கைத்தொலைபேசியை வாங்குவதற்காக உடல் உறுப்பை விற்பது மிக தவறு என்று அவர் கூறினார். ஆனால் தாங்கள் மாண்ட பிறகு, உடல் உறுப்புகளை தானம் செய்ய தாய்லாந்து மக்களை அவர் கேட்டுகொண்டார். அந்நாட்டில் 6,000 பேர் மாற்று உடல் உறுப்புக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் புதிய ஐபோனின் விலை சுமார் 50,000 பாட் ($1,940). லாவோசில் அதன் விலை இன்னும் அதிகம். மேலும், தாய்லாந்து மக்களைவிட லாவோஸ் மக்களின் மாதச் சம்பளம் மிகக் குறைவு. இதனால் லாவோசில் ஒரு ஐபோனை வாங்க ஒரு சிறுநீரகத்தை விற்றால்தான் முடியும் என்று அங்குள்ளவர்கள் வேடிக்கைக்காக பேசுவதுண்டு.

