உலகின் ஆகப் பழமையான இதயம் வரலாற்றுக்கு முந்தைய ஒரு மீனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இதயம் 380 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த மீனின் தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்கள் உள்ளிட்ட முதுகு எலும்பு உள்ள அனைத்து மிருகங்களிலும் இதயம் எவ்வாறு உருமாறியது என்பதை விளக்கும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு இது என நம்பப்படுகிறது. தங்கள் ஆராய்ச்சி பணியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது என்று ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 'கோகோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் வகை இப்போது அழிந்துவிட்டது. இந்த மீன்வகை டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்னரே 60 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்தன. கோகோ மீனின் இதயம் மற்ற மீன்களைவிட இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது ஆராய்ச்சியில் தெரியவந்தது. இதன் இதயம் மனிதர்களின் இதயம் போன்றே இருக்கிறது. மனித உடல் அமைப்பை விளக்குவதற்கு இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக இருக்கும் என்று மற்ற நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மீனில் உள்ள துடுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மனித கை கால்களாக உருமாறியிருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரம் இந்த கண்டுபிடிப்பாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

