முல்லைத்தீவு: தினக் கூலி ஊழியரான திரு சிங்காரம் சூசயமுத்து தனது கைகளைக் கொண்டு நடந்து தனது பணிகளில் ஈடுபடுகிறார், நிலக்கடலை விவசாயம் செய்கிறார். 2009ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட ஆகாயப் படைத் தாக்குதலில் இவர் தனது இரண்டு கால்களையும் இழந்தார்.
இடது கையிலும் காயம் ஏற்பட்ட 44 வயது சூசயமுத்து தற்போது சராசரி தினக் கூலி ஊழியரைவிட சிரமங்களை எதிர்நோக்குவதாகக் கூறுகிறார்.
போரால் தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள திரு சூசயமுத்து வாழும் முல்லைத்தீவு சீர்குலைந்துபோனது. இப்போது இலங்கையில் நிலவிவரும் பொருளியல் நெருக்கடியால் திரு சூசயமுத்துவைப் போன்ற தமிழர்கள் மறுபடியும் அவதிப்படுகின்றனர்.
பொருளியல் நெருக்கடிக்கு முன்பு மீனவராகப் பணிபுரிந்த திரு சூசயமுத்து, இலங்கையின் எரிசக்தி பற்றாக்குறையால் அதைக் கைவிட்டு நிலக்கடலை விவசாயம் செய்யத் தொடங்கினார்.
"நாங்கள் பசியைத் தாங்கிக்கொள்ளலாம்; ஆனால் 'சாப்பிட இவ்வளவு உணவுதான் இருக்கிறது, படுத்து உறங்கு' என்று பிள்ளைகளிடம் எங்களால் சொல்லமுடியாது," என்று திரு சூசயமுத்து வருத்தம் தெரிவித்தார்.
உணவுப் பணவீக்க விகிதம் சென்ற மாதம் 93.7 விழுக்காடாகப் பதிவானது. பெரும் உணவுப் பற்றாக்குறையால் திரு சூசயமுத்துவைப் போல் இலங்கையில் 6.2 மில்லியன் மக்கள் இன்னலுக்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 'எஃப்ஏஓ' எனும் உணவு, விவசாய அமைப்பு கணித்துள்ளது.

