கியவ்: ரஷ்யாவிடம் இருந்து சில பகுதிகளை உக்ரேனியப் படைகள் மீட்டிருந்தாலும் போர் தங்களுக்குச் சாதகமாகத் திரும்பியுள்ளதாகக் கருதமுடியாது என்று உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி சொன்னார்.
அப்படி மீட்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளில், ரஷ்ய வீரர்கள் போர்க் குற்றங்கள் செய்துள்ளதாகக் கூறிய அவர், புச்சா நகரத்தில் பலரை ரஷ்ய வீரர்கள் கொன்று புதைத்திருந்ததைச் சுட்டினார்.
"வடகிழக்கு கார்கிவ் பகுதியில் கிட்டத்தட்ட 450 பேர் குவியலாகப் புதைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் தனித்தனி புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர். பலர் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
"ஒரு சில இடங்களில் மக்கள் குடும்பங்களாக புதைக்கப்பட்டுள்ளனர்.
"போர்க் குற்றங்கள் நடந்ததற்கான சில ஆதாரங்கள் உள்ளன. உக்ரேனிய, அனைத்துலக அதி காரிகள் அப்பகுதிகளை ஆராய்ந்து வருகின்றனர்," என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
இஸியம் நகரப் புதைகுழி ஒன்றில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கார்கிவ் ஆளுநர் ஓலேஹ் சின்ஹுபோவ் கூறி
னார்.
உக்ரேனியப் படைகளின் தீவிர எதிர்த்தாக்குதல்களைப் பாராட்டிய ஸெலன்ஸ்கி, அதற்குள்ளாக போர் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்துவிடமுடியாது என்றும் சொன்னார்.
இதற்கிடையே, உக்ரேனின் எதிர்தாக்குதல்களால், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஷ்ய அதிபர் புட்டின் கூறியுள்ளார். அத்துடன் உக்ரேன் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யா அவசரம் காட்டவில்லை என்றும் அவர் சொன்னார்.
உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய புட்டின், "உக்ரேன் மீதான ராணுவ நடவடிக்கை திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
"டோன்பாஸ் பகுதியில் ரஷ்யப் படை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மெதுவான முன்னேற்றமாக உள்ளது. ரஷ்ய ராணுவம் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது," என்றார் அவர்.
ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதி மட்டுமே உக்ரேனில் சண்டையிடுவதாகவும் டோன்பாஸ் பகுதியை முற்றிலும் கைப்பற்றுவதே தங்களது முக்கிய இலக்கு என்றும் அவர் சொன்னார்.
உக்ரேனியப் படைகள் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்வதாக சாடிய புட்டின் இதே நிலை நீடித்தால், உக்ரேன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி
இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

