இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சில நாள்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், அங்கு மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்திருந்தாலும், அண்டைநாடான இந்தியாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
பொருள் சேதங்களையும் உயிர் சேதங்களையும் தவிர்க்கும் நோக்கில், குறிப்பிட்ட சில பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறும்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கெனவே பொருளாதார சரிவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், வெள்ளத்தால் கிட்டத்தட்ட 30 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது.
நேப்பாளத்தில் 17 பேர் மரணம்
இதற்கிடையே, நேப்பாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் குறைந்தது 17 பேர் உயிர் இழந்தனர்.
மேற்கு நேப்பாளத்தில் உள்ள அச்சாம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது ஐந்து வீடுகள் சேற்றில் புதைந்தன. இதில் சிக்கிய ஏழு பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்துறை அமைச்சர் பால் கிருஷ்ண காந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, ஜப்பானில் கனமழை எச்சரிக்கை
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரிரு நாள்களுக்குப் பலத்த மழையும் கடுமையான வெள்ளமும் ஏற்படும் என அந்நாட்டின் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
மேலும் நாட்டின் பிற பகுதிகளில் வரும் மாதங்களில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்குப் பகுதியான கியூஷு தீவு பகுதியை மிக மோசமான சூறாவளி தாக்கும் என்றும் அது கடும் சேதங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டு
உள்ளது.
'நன்மடோல்' என்ற அந்த சூறாவளியின் காரணமாக மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி இந்த சூறாவளி சனிக்கிழமையன்று கரையைக் கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாக அங்கிருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

