தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு;
ஏழு பேரின் சடலங்கள் மீட்பு
ஜகார்த்தா: சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கிட்டத்தட்ட 20 பேர் மாண்டிருக்கக்கூடும் என்று இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களில் நான்கு பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும், மழை குறுக்கிட்டால் அது தாமதமாகும் என்று மீட்புக் குழு அதிகாரிகள் கூறினர்.
மேற்கு போர்னியோ தீவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டபோது, அந்தச் சுரங்கத்தில் பலர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். வியாழக்கிழமையன்று நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்த தகவல்கள் தாமதமாகத்தான் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது.
ஈஸ்டர் குண்டுவெடிப்பில் முன்னாள் அதிபர் சந்தேகநபராக அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாளன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில்
11 இந்தியர்கள் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அப்போது பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்நிலையில், இந்தத் குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தேக நபராக இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறவுள்ளதாக தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை அறிக்கைகளை மைத்ரிபால சிறிசேனா புறக்கணித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அக்டோபர் 14ஆம் தேதி மைத்ரிபால சிறிசேனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தங்கு விடுதிகளில் தனிமைப்படுத்தும் நடைமுறையைத் தவிர்க்க பரிசீலனை
ஹாங்காங்: வெளிநாடுகளில் இருந்து ஹாங்காங் செல்வோர் தங்கு விடுதிகளில் தனிமைப்படுத்தும் கட்டாய நடைமுறையைக் கைவிடுவது குறித்து ஹாங்காங் அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஹாங்காங்கின் தலைமை சுகாதார அதிகாரியை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று இதனை தெரிவித்தது.
இதற்கான தரவுகளை குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் சொன்னார். அனைத்துலக நடைமுறைகளைப் பின்பற்றுவதே அரசாங்கத்தின் விருப்பம் என்றும் அவர் சொன்னார்.

