மிகக் கடுமையான 'நன்மடோல்' சூறாவளிக் காற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) அன்று ஜப்பானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பேரை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தெற்கில் உள்ள கியுஷு மாவட்டத்தில் உள்ள காகோஷிமா எனும் வட்டாரத்துக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பருவநிலை நிகழ்வுகளை முன்னுரைக்கும்போதுதான் ஜப்பான் இத்தகைய சிறப்பு எச்சரிக்கையை விடுக்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் காகோஷிமாவிலும் அதன் அருகில் உள்ள மியாஸாக்கி வட்டாரத்திலும் உள்ள 25,680 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சூறாவளிக் காற்று கடக்கும் வரைக்கும் அந்த வட்டாரத்தில் உள்ள ரயில், விமானம், படகுச் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
பலத்த காற்று, புயல், கனமழை ஆகியவற்றால் அந்த வட்டாரம் முன் எப்போதுமில்லாத அளவுக்கு ஆபத்தை எதிர்நோக்கக்கூடும் என்று ஐப்பானிய வானிலை நிலையம் கூறியது.
வீடுகள் இடிந்து விழக்கூடும் என்றும் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படலாம் என்றும் அது தெரிவித்தது.

