பிஷ்கெக்: எல்லைப் பகுதியில் தஜிகிஸ்தான் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 36 பேர் மாண்டுவிட்டதாக கிர்கிஸ்தான் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கிட்டத்தட்ட 134 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அது கூறியது.
மோதல் காரணமாக பொதுமக்களும் மரணம் அடைந்ததாக தஜிகிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்தது. ஆனால் அதுகுறித்த மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
அண்மைய சில நாள்களாக இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் மோதல் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தற்காலிக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக இருநாடுகளும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், அமைதியான முறையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, மோதல் மோசமாகாதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கிர்கிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.
சண்டையை நிறுத்தும்படி இருநாடுகளிடமும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. எல்லை தொடர்பான சர்ச்சைக்கு நீண்டகாலத் தீர்வு காண உதவ தயாராக இருப்பதாக அது கூறியது.
கடந்த ஆண்டு கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 50 பேர் மாண்டனர்.

