செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6c811b6c-02e5-4f76-a4ad-bafb787c30e9
-

ஆஸ்திரேலியா: ரஷ்ய சுற்றுப்பயணிகளுக்குத் தடையில்லை

சிட்னி: உக்ரேன் மீது போர் தொடுத்த காரணத்துக்காக ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய ரஷ்ய சுற்றுப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்படாது என்று ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள், நிறுவனங்கள் மீது ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களில் அந்நாட்டின் வங்கிக் துறையைச் சேர்ந்தவை அதிகம்.

அதுமட்டுமல்லாது, உக்ரேனுக்கு உதவும் வகையில் தற்காப்புச் சாதனங்களையும் மனிதாபிமான உதவிகளையும் ஆஸ்திரேலியா அனுப்பிவைத்துள்ளது.

அலாஸ்காவில் புயல், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள்

ஃபேர்பேங்க்ஸ்: அலாஸ்காவின் மேற்குக் கடலோரப் பகுதியைத் தாக்கிய புயல் காரணமாக அங்கு வெள்ளம் கரைபுரண்டோடியது. அசுர பலத்துடன் சீறிய புயலால் கட்டடங்களும் வீடுகளும் சேதமுற்றன. பல வீடுகளில் அஸ்திவாரம் ஆட்டங்கண்டது. சில வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. பள்ளி ஒன்றை வெள்ளம் சூழ்ந்ததாகவும் வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை அதே குடியிருப்பைச் சேர்ந்த சிலர் காப்பாற்றியதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இன்னும் சில நாள்கள் கழித்து, வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தெரிவிக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

அச்சுறுத்தும் சூறாவளி;

தயாராகும் பியோர்ட்டோ ரிக்கோ

சான் யுவான்: பியோர்ட்டோ ரிக்கோவை நோக்கி சூறாவளி ஃபியோனா விரைகிறது. இதனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை நிகழும் அபாயம் இருப்பதாக பியோர்ட்டோ ரிக்கோவின் தேசிய சூறாவளி நிலையம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, குவாடிலோப் பிரெஞ்சு கரீபியன் தீவில் கனமழை பெய்தது. வீடு ஒன்றை வெள்ளம் அடித்துச் சென்றதை அடுத்து அதில் வசித்து வந்த ஆடவர் மாண்டார்.

சீனாவில் பேருந்து விபத்து:

27 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் 27 பேர் மாண்டனர்.

இதுவே சீனாவில் இவ்வாண்டு நிகழ்ந்துள்ள ஆக மோசமான சாலை விபத்து என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த 20 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.