எலிசபெத் அரசியாருக்கு அரசு மரியாதையுடம் இறுதி சடங்கு இன்று நடைபெறும். இதற்காக பிரிட்டனில் மும்முரமாக ஆயதப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெஸ்ட்மினிஸ்ட்டர் அரங்கில் இடம்பெறும் இறுதிச் சடங்கில் கிட்டத்தட்ட 2,000 உலகத் தலைவர்கள், அரசு குடும்பங்களை சேர்ந்தவர்கள், மற்ற பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஜப்பானிய மன்னர் நருஹித்தோ, சீனத் துணை அதிபர் வோங் ஜிஷான் ஆகியோர் ஏற்கெனவே அரசியாரின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டனர்.
அரசியார் மிக கண்ணியமானவர். சேவைக்கு என்றே தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துகொண்டவர். கடந்த 70 ஆண்டுகளாக அவர் நமது மத்தியில் வாழ்ந்தது நாம் செய்த புண்ணியம் என்று திரு பைடன் அரசியாருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், உலகெங்கிலும் இருந்து தமக்கு கிடைத்துள்ள அனுதாபங்களும் ஆதரவும் கருதி மனம் நெகிழ்வதாக மன்னர் சார்லஸ் குறிப்பிட்டார். தம்முடைய தாயாரான மறைந்த அரசியாருக்கு இறுதி மரியாதை செலுத்தவந்த ஆயிரக்கணக்கானோருக்கு தம்முடைய நன்றியை மன்னர் தெரிவித்துகொண்டார்.
இறுதிச் சடங்கு சிங்கப்பூர் நேரப்படி மாலை ஆறு மணிக்கு தொடங்கும். லண்டன் சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிரிட்டனில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் அரசியார் செப்டம்பர் எட்டு அன்று காலமானார்.