கனடாவில் நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில் காயமுற்ற இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். 28 வயதான சட்வின்டர் சிங் துப்பாக்கிச் சுட்டில் ஏற்பட்ட காயங்களால் மாண்டார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் முன்னதாக மாண்டனர்.
ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள மில்ட்டன் எனும் நகரில் சென்ற திங்கட்கிழமை சம்பவம் நடந்தது. இந்தியாவைச் சேர்ந்த சிங் அங்கு படித்துகொண்டு பகுதி நேரமாக எம்.கே எனும் வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் வேலைபார்த்து வந்தார்.
சென்ற வாரம் அந்நகரில் மதிய உணவு சாப்பிட்டுகொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிக்காரன் பின்னர் சிங் வேலைபார்த்த நிலையத்துக்கு சென்று அங்கு இருந்த சிங் உட்பட இருவரை சுட்டுக்கொன்றான். மாண்ட மற்றொருவர் 38 வயது ஷக்கில் அஷ்ராஃப் என்பவர். அவர் எம்.கே வாகன பழுதுபார்ப்பு நிலையத்தின் உரிமையாளர் என்று காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
40 வயது துப்பாக்கிக்காரன் பின்னர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் எம்.கே வாகன பழுதுபார்பு நிலையத்தின் முன்னாள் ஊழியர் என்று நம்பப்படுகிறது.
சம்பவம் குறித்து காவல் துறையின் விசாரணை தொடர்கிறது.

