எலிசபெத் அரசியாரின் இறுதிப் பயணம்

எலிசபெத் அரசியாரின் இறுதிப் பயணம்

2 mins read
96eb913c-0bb0-4bc8-b60f-9525d241defc
படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏபி -
multi-img1 of 3

பிரிட்டனின் மறைந்த எலிசபெத் அரசியாரின் நல்லுடல் இறுதிச் சடங்குக்குப் பிறகு வின்சோர் அரண்மனையில் உள்ள மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும். மறைந்த அவரது கணவர் இளவரசர் பிலிஃப், பெற்றோர், தங்கை ஆகியோரும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசியாரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இடம்பெற்று வருகிறது. 1965ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டனில் அரசு மரியாதையுடன் இடம்பெறும் இறுதிச் சடங்கு இது. 1965ல் பிரிட்டனின் முன்னைய பிரதமர் வின்ஸ்ட்டன் சர்ச்ஹில்லுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

அரசியாரின் நல்லுடல் தாங்கிய பேழை வெஸ்ட்மினிஸ்ட்டர் மண்டபத்திலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்துக்கு முதலில் எடுத்துசெல்லப்பட்டது. சாலைகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிநின்று ராணிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

தேவாலயத்தில் பிரிட்டனின் அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட 2,000 பேர் கூடியிருந்தனர். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் இறுதிச் சடங்கிற்கு வருகையளித்தனர். தேவாலயத்தின் மணிக்கூண்டு அரசியாரின் வயதை குறிக்கும் விதத்தில் 96 முறை ஒலிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர்களின் முடிசூட்டு விழா, அவர்களது திருமணங்கள், இறுதிச் சடங்குகள் ஆகியவை இந்த வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருகின்றன. எலிசபெத் அரசியாரின் திருமணமும் முடிசூட்டு விழாவும் இந்த தேவாலயத்தில்தான் இடம்பெற்றன.

தேவாலயத்தில் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அரசியாரின் நல்லுடல் லண்டனின் முக்கிய பகுதிகள், அரசியாரின் வசிப்பிடமான பக்கிங்ஹாம் அரண்மளை ஆகியவற்றை கடந்து வின்சோர் அரண்மனைக்கு எடுத்துசெல்லப்பட்டது.

ராணியின் இறுதிச் சடங்கு பல நாடுகளில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் ஒருவரின் இறுதிச் சடங்கு நேரடியாக ஒளிபரப்பப்படுவது இதுவே முதன்முறை.