கோலாலம்பூர்: தேசிய முன்னணி் கூட்டணியின் ஒரு பகுதியான மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) ஆண்டாண்டு காலமாகப் போட்டியிடும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் இம்முறையும் போட்டியிடும் என்று அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார். நேற்று முன்தினம் அஸியாட்டா அரீனா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற மஇகா இளையர் அணிப் படை அறிமுக விழாவில் திரு ஸாஹிட் கலந்துகொண்டு பேசினார்.
வழக்கத்தைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட மஇகா கோரிக்கை விடுக்கலாம் என்றும் அதுகுறித்து கலந்துரையாடிய பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலில் மஇகா ஒன்பது நாடாளுமன்றத் தொகுதி களிலும் 18 சட்டமன்றத் தொகுதி களிலும் போட்டியிட்டது.
பேராக் மாநிலத்தில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் வசம் சென்றது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அக்கட்சியின் சி. சிவராஜ் கைப்பற்றினார்.
ஆனால் கேமரன் மலைத் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, அத்தொகு தியில் இடைத்தேர்தல் நடத்தப்
பட்டது. அதில் அம்னோவைச் சேர்ந்த திரு முகம்மது ராம்லி நூர் வெற்றி பெற்றார்.
எதிர்வரும் தேர்தலில் மஇகா கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் திரு ஸாஹிட் நம்பிக்கை தெரிவித்தார். திரு விக்னேஸ்வரனும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

