பெட்டாலிங் ஜெயா: அம்னோ கட்சியிலிருந்து தாம் விலகிவிட்டதாகப் பரவிய புரளிகளை
மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் மறுத்துள்ளார்.
கட்சியில் பல சவால்களை எதிர்கொள்வதை அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அம்னோவைவிட்டு எங்கும் செல்லப்போவதில்லை என்று அவர் அடித்துக்கூறுகிறார். அம்னோ கட்சியின் உறுப்பினராகத் தொடர்வேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.
திரு கைரி அம்னோவிலிருந்து விலகிவிட்டதாகக் கூறும் காணொளி ஒன்றை வெளியிட்டவர்களை அவர் சாடினார்.
"இத்தகைய பொய்ச் செய்திகளை நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய காணொளிகளையும் தகவல்
களையும் பார்த்த சிலர் என்னிடம் தொடர்புகொண்டு நான் இன்னும் அம்னோவில் இருக்கிறேனா என்று கேட்கின்றனர்.
"அம்னோவின் இளையர் அணித் தலைவராக நான் 2009ஆம் ஆண்டில் பதவி ஏற்றேன். ஆனாலும் எனக்கு அப்போது அமைச்சர் பதவி தரவில்லை. நான் புறக்கணிக்கப்பட்டேன். இருந்தும், நான் அம்னோவில் தொடர்ந்து இருந்து வருகிறேன்," என்று அமைச்சர் கைரி தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி தோல்வியைத் தழுவியபோதிலும் அம்னோவிலிருந்து தாம் விலகவில்லை என்றார் அவர்.
இம்முறை தமது தொகுதியான ரெம்பாவ்வில் வேறொருவரை நிறுத்த கட்சித் தலைமை முடிவெடுத்தாலும் அம்னோவில் தொடர்ந்து இருக்கப் போவதாக திரு கைரி தெரிவித்தார்.

