மியன்மாரில் இராணுவம் நடத்திய ஆகாயத் தாக்குதலில் குறைந்தது 11 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கிராமத்தில் ஒளிந்துகொண்டிருந்த கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் கூறியது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் குழந்தை நிதியம் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது. தாக்குதல் பள்ளிக்கு அருகே நடந்ததால் குறைந்தது 11 பிள்ளைகள் உயிரிழந்தனர். இன்னும் 15 சிறுவர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நிதியம் கூறியது.
இந்த பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கடத்திகொண்டிருந்ததாக தங்களுக்கு கிடைத்த துப்பின் அடிப்படையில் இந்த பகுதிக்கு ஆகாயப் படைகள் அனுப்பப்பட்டதாக இராணுவ ஆட்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
சென்றாண்டு பிப்ரவரியில் இராணுவம் ஆட்சியை கவிழ்த்ததிலிருந்து மியன்மாரில் 2,300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாண்டுள்ளனர். இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை இராணுவம் முடக்கிவருகிறது.


