கியவ்: உக்ரேனின் இஸ்யும் நகரை அந்நாட்டுப் படைகள் ரஷ்யாவிட
மிருந்து மீட்டுக்கொண்டதை அடுத்து, இலங்கை நாட்டினர் ஏழு பேர் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர்.
கல்வி, வேலை நிமித்தம் உக்ரேனில் வசித்துவந்த அந்த ஏழு பேரையும் கடந்த மே மாதம் ரஷ்யப் படைகள் சிறைபிடித்தனர்.
அவர்களை ரஷ்யப் படையினர் கடந்த நான்கு மாதங்களாக உக்ரேன்-ரஷ்யா எல்லைப் பகுதியில் உள்ள இயந்திர ஆலை ஒன்றில் கொத்தடிமைகளாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, ரஷ்யப் படையினர் தங்களைச் சித்திரவதை செய்ததாகவும் அந்த இலங்கை நாட்டினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், போரின் துவக்கத்தில் ரஷ்யாவிடம் இழந்த பகுதி களை அண்மைய நாள்களில் உக்ரேன் படையினர் மீட்டு வருகின்றனர்.
அந்த ஏழு பேரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆலை இருந்த பகுதி உக்ரேனியப் படையினரின் கட்டுக்குள் வந்ததும் அங்கிருந்து ரஷ்யப் படையினர் பின்வாங்கினர்.
இதையடுத்து, அந்த ஏழு பேருக்கும் விடிவுகாலம் பிறந்தது.
அவர்களை உக்ரேனிய காவல்துறையினர் கார்கிவ் நகருக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை, புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கினர்.
ஏழு பேரும் தற்போது நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றைக் கொண்ட மறுவாழ்வு மையம் ஒன்றில் தங்கவைக்கப்
பட்டுள்ளனர்.

