புரட்டி எடுத்த புயல்; மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தோக்கியோ: ஜப்பானை உலுக்கிய நன்மடோல் புயல் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்தது. இருவர் மாண்டுவிட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். மேலும் இருவர் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையை அடுத்து, ஜப்பானின் கியூஷு தீவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி புயலின் சீற்றம் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரயிறுதியில் நிலத்தைக் கடந்த புயல், பல மரங்களை வேரோடு சாய்த்தது. ஒரு மாதத்துக்குப் பெய்ய வேண்டிய மழை கடந்த வாரயிறுதியில் பெய்ததாக அதிகாரிகள் கூறினர்.
குறைந்தது 114 பேர் காயமடைந்தனர். அவர்களில் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பரவிய நோய்கள்; பாகிஸ்தானில் ஒன்பது பேர் பலி
கராச்சி: வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு இன்னொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் நோய்கள் பரவி வருவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் ஏற்பட்டு குறைந்தது ஒன்பது பேர் நேற்று மாண்டதாக அந்நாட்டு அரசுப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
எரிபொருள் விலை ஏற்றத்தால் ஜோக்கோவியின் புகழ் பாதிப்பு
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் எரிபொருள் விலையை உயர்த்த அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ எடுத்த முடிவு, இந்தோனீசியர்கள் மத்தியில் அவருக்கு இருந்த புகழைப் பாதித்துள்ளது.
எரிபொருள் விலை ஏற்றம் குறித்து இந்தோனீசியர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பேராக் பன்றிப் பண்ணைகளில்
ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்
கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள இரண்டு பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அந்நாட்டின் விலங்கு மருத்துவச் சேவைத் துறை கண்டுபிடித்திருப்பதாக பெர்னாமா செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்தது. அங்குள்ள பன்றிகளுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் பாதிப்பு வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இரு பண்ணைகளில் இருந்த அனைத்துப் பன்றிகளும் அழிக்கப்பட்டதாக பெர்னாமா கூறியது.
'தப்பி ஓடிய 'ஃபேட் லெனர்ட்' வெனிசுவேலாவில் இருக்கக்கூடும்'
கோலாலம்பூர்: அமெரிக்க அதிகாரிகளால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பி ஓடிய ஃபேட் லெனர்ட் எனப்படும் லெனர்ட் கிளன் ஃபிரான்சிஸ், வெனிசுவேலாவில் இருக்கக்கூடும் என்று செய்தியாளர்களான டோம் ரைட் மற்றும் பிராட்லி ஹோப் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரான்சிஸ் எதிர்நோக்குகிறார்.

