யூரோ 2024 காற்பந்துப் போட்டி: குலுக்கலில் ரஷ்யா பங்கெடுக்கத் தடை
பாரிஸ்: ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான குலுக்கலில் ரஷ்யா பங்கெடுக்காது என்பதை யுஏஃபாவும் ரஷ்யாவின் காற்பந்துச் சம்மேளனமும் உறுதிப்படுத்தியுள்ளன. உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக அனைத்துலகப் போட்டியில் பங்கெடுக்க ரஷ்ய அணிகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டன. கத்தாரில் நடைபெற உள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கெடுக்கவும் ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்: இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலியா
மொகாலி: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்று முன்தினம் வெற்றி பெற்றது.
209 ஓட்ட இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் அதிரடியாக அமைந்தது. ஏரோன் ஃபின்ச்-கேமரூன் கிரீன் இணை மிரட்டலாக தொடங்கினர். இந்தியாவின் மோசமான களக்காப்பு கிரீனுக்கு வாய்ப்பை அதிகரித்தது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட, அதைச் சாதகமாகப் பயன்படுத்தி அரை சதம் கடந்தார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித் பக்கபலமாக அமைய, ஆஸ்திரேலியாவின் ஓட்ட விகிதம் ஓவருக்கு 10ஐ தாண்டியது.
இவர்கள் கூட்டணியை அக்சர் பட்டேல் பிரித்தார். 61 ஓட்டங்கள் எடுத்த கிரீனை அக்சர் வீழ்த்த, அடுத்த ஒரே ஓவரில் ஸ்மித்தும் கிளென் மேக்ஸ்வெல்லும் வெளியேறினர். ஜோஷ் இங்கிலிசை அக்சர் வெளியேற்ற, இந்தியாவின் பக்கம் ஆட்டம் திரும்பியது.
ஆனால், அறிமுக வீரராக களமிறங்கிய டிம் டேவிட்டும் மேத்யூ வாடும் இணைந்து இந்தியாவுக்கு பயம்காட்டினர். ஹர்ஷல் பட்டேலின் ஓவரில் சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் பக்கம் வாட் திருப்பினார். அவர் எடுத்த 45 ஓட்டங்களின் உதவியுடன், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.
'ஓய்வுபெற்ற பிறகும் டென்னிசுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன்'
ஜெனிவா: டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், தமக்கு அனைத்தையும் தந்துள்ள விளையாட்டுடன் இறுதிவரை தொடர்பில் இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
பிபிசி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், அடுத்த அவரது திட்டங்கள் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "எனது எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியாது. ஆனால், எனக்கு அனைத்தையும் தந்துள்ள விளையாட்டிலிருந்து நான் முழுமையாக விலகி இருக்க விரும்பவில்லை," என்றார்.

