பிரிட்டனில் நிறுவனங்கள் எரிசக்திக் கட்டணத்தைச் செலுத்த உதவும்
லண்டன்: எதிர்வரும் குளிர்காலத்தில் எரிசக்திக் கட்டணங்களைச் செலுத்த நிறுவனங்களுக்கு உதவுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் £40 பில்லியன் (S$64 பி.) நிதியாதரவுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்கீழ், ஆறு மாதங்களுக்கு தொழில் நிறுவனங்களுக்கான மொத்த எரிசக்திக் கட்டணங்களுக்கு அரசாங்கம் வரம்பு விதிக்கும்.
அதன் பின்னர், குறிப்பிட்ட சில தொழில்துறைகளுக்கு தொடர் ஆதரவு தேவையா என்பது பற்றி மறுஆய்வு செய்யப்படும்.
ஒரு கிலோவாட்-மணி மின்சாரத்துக்கு 21.1 காசு, எரிவாயுவுக்கு 7.5 காசு என வரம்பு விதிக்கப்படும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
இதன்படி, வரும் குளிர்காலத்தில் தற்போதைய மொத்த கட்டணங்களில் ஏறத்தாழ 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். ஒவ்வொரு நிறுவனமும் ஒப்பந்தத்தில் எப்போது கையெழுத்திட்டது என்பதைப் பொறுத்து, அதற்கான சலுகை அமையும்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதித்துள்ளன. அதற்குப் பதிலடி தரும் விதமாக, ஐரோப்பாவுக்கு எரிசக்தி வழங்குவதை ரஷ்யா கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், எரிசக்தி விலையுயர்வால் பாதிப்படைந்துள்ள நிறுவனங்களுக்கு உதவ பிரிட்டிஷ் அரசாங்கம் முனைகிறது.
இந்த நிதியுதவித் திட்டம், அடுத்த ஆறு மாதங்களுக்கு £21 பில்லியன் முதல் £42 பில்லியன் வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கிற்குப் பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் அங்கு நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் நிதியுதவித் திட்டத்தை வெளியிடவில்லை என்றால் சிற்றுண்டி விடுதிகள், மதுபானக்கூடங்கள், கடைகள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் சாத்தியம் அதிகம். அது நடப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது," என்றார்.
புதிய திட்டத்தின்கீழ், ஏப்ரல் 1லிருந்து நிலையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட வர்த்தகங்களுக்கு வழங்கப்படும் கட்டணத் தள்ளுபடி, விலையுயர்வை மட்டுப்படுத்த உதவும்.
இதுபோக, குடும்பங்கள் எரிசக்திக் கட்டணங்களைச் செலுத்த உதவ £130 பில்லியன் திட்டத்தையும் அரசாங்கம் வகுத்து உள்ளது.

