கோலாலம்பூர்: பொருளியல் நெருக்கடியால் பெரும் பாதிப்புக்குள்ளான இலங்கையிலிருந்து 10,000 ஊழியர்களை வேலைக்குச் சேர்க்க மலேசிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மனிதவளம் வழங்க இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வ விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்ததாகக் கூறினார். இலங்கை ஊழியர்களை வேலைக்குச் சேர்க்க, செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த மலேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக திரு சரவணன் கூறினார்.
எனவே, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்க்க அனுமதிக்கப்படும் நிறுவனங்கள், அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவளித்து இலங்கை ஊழியர்களை வேலையில் அமர்த்த முன்வருமாறு அவர் வலியுறுத்தினார். இதன் தொடர்பில் தீர்வைக் கட்டணத்தைச் செலுத்திய முதலாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

