ஈரானில் வலுவடையும் அதிருப்தி, எதிர்ப்பு, கொந்தளிப்பு

ஈரானில் வலுவடையும் அதிருப்தி, எதிர்ப்பு, கொந்தளிப்பு

2 mins read
2b0eb2a6-cce2-4dad-9003-ad976bd1b9bc
ஈரானில் ஆர்ப்பாட்டங்கள். படம்: ஏஎஃப்பி -

ஹிஜாப் எனும் தலையங்கியை அணியாததற்காக ஈரானிய அறநெறிப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட ஓர் இளம் பெண் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளில் எதிர்ப்புக் குரல் வலுவடைந்து வருகிறது.

22 வயது மாஹ்சா அமினி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது கோமா நிலைக்குச் சென்றார்.

பிறகு சிகிச்சை பலனின்றி மாண்டார்.

அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாஹ்சா அமினியின் மரணம் ஈரானியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குர்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முதலில் நடத்தப்பட்டன.

அதன் பிறகு ஈரானெங்கும் குறைந்தது 50 நகரங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் பரவியிருக்கின்றன.

ஆர்ப்பாட்டாக்காரர்களைக் கலைக்க ஈரானியக் காவல்துறையினர் மூர்க்கத்தனமான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

"நாங்கள் இறந்தாலும் ஈரானை மீட்டெடுப்போம்," என்று ஈரானின் வடகிழக்குப் பகுதியில் வியாழக்கிழமையன்று (22 செப்டம்பர்) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருந்த காவல் நிலையத்துக்குத் தீவைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

ஈரானின் ஆன்மீகத் தலைவருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

இதற்கிடையே, புதன்கிழமையன்று (21 செப்டம்பர்) ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ஈரானியப் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கியால் சுட்டதாகவும் மூவர் மாண்டதாகவும் குர்திய உரிமைக் குழு தெரிவித்தது.

இதன்மூலம் மாண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை குறைந்தது 10 பேர் மாண்டுவிட்டதாக நம்பப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்லவில்லை என்றும் அவர்கள் அரசாங்க எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில் தீவிரம் குறையாமல் இருப்பதால் இணையச் சேவையை அதிகாரிகள் கட்டுப்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது