சிங்கப்பூரைப் பந்தாடிய வியட்னாம்
ஹோ சி மின்: வியட்னாமுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புமுறை காற்பந்தாட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் படுதோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் வியட்னாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்றது.
நட்புமுறை ஆட்டம் என்ற காரணத்தால் இரண்டு குழுக்களும் அவற்றின் வழக்கமான ஆட்டக்காரர்கள் பலரைக் களமிறக்கவில்லை. அதற்குப் பதிலாகப் பல புதிய ஆட்டக்காரர்கள் அனுபவம் பெற அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று ஆசியான் காற்பந்துச் சம்மேளனக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூரும் வியட்னாமும் மோத இருக்கின்றன. அதற்கு முன்பு தங்கள் ஆட்டக்காரர்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய இருதரப்பு பயிற்றுவிப்பாளர்களுக்கும் இந்த ஆட்டம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.
உக்ரேனை வீழ்த்திய ஸ்காட்லாந்து
கிளாஸ்கோ: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஸ்காட்லாந்து வலுப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் உக்ரேனை அது 3-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஸ்காட்லாந்து ஆதிக்கம் செலுத்தியது. கடந்த ஜூன் மாதம் ஹேம்டன் பார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் உக்ரேனிடம் 3-1 எனும் கோல் கணக்கில் தோற்று உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை ஸ்காட்லாந்து கோட்டைவிட்டது.
எனவே, நேற்று முன்தினம் கிடைத்த வெற்றி அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது.

