தேன், தேநீர், பூட்டான் மஞ்சள் அடங்கிய அன்பளிப்புப் பை. முக்கியமாக கைபேசி சிம் அட்டைகள்.
வெள்ளிக்கிழமை (செப் 23) அன்று பூட்டான் வந்திறங்கிய சுற்றுப்பயணிகளுக்கு அவற்றை அன்பளிப்பாக அளித்து இன்முகத்துடன் வரவேற்றனர் அதிகாரிகள்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக எல்லைகளை மூடியிருந்த பூட்டான் வெள்ளிக்கிழமை அன்று தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.
பக்கத்து நாடான நேப்பாளத்திலிருந்து, பூட்டானின் பாரோ நகரில் இன்று விமானம் வந்திறங்கியது. அதில் வந்த 23 சுற்றுப்பயணிகளுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
சுற்றுப்பயணத் துறையைப் பெரிதும் நம்பியிருக்கும் பூட்டான், கொவிட்-19 கிருமிப்பரவல் அச்சத்தால், 2020 மார்ச்சில் தனது எல்லைகளை மூடியது. 800,000 பேர் எனும் மக்கள் தொகையைக் கொண்ட பூட்டானில் 61,000 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியது.
21 பேர் மட்டுமே உயிர் இழந்தனர். ஆனால் பூட்டான் பொருளியல் மிகவும் நலிவடைந்தது. அதிகமானோர் வறுமையில் தள்ளப்பட்டனர்.
முப்பது ஆண்டுகளாக பூட்டான், சுற்றுப்பயணிகளிடமிருந்து 65 அமெரிக்க டாலரை நீடித்த, நிலையான வளர்ச்சிக் கட்டணமாக வசூலித்து வந்தது. ஜூலையில் அக்கட்டணம் ஒரு சுற்றுப்பயணிக்கு 200 அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டது.
சுற்றுப்பயணிகளின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை மட்டுப்படுத்தும் இயற்கைப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அத்தொகை செலவிடப்படும் என்று பூட்டான் அரசாங்கம் கூறுகிறது.

