மணிலா: தென் சீனக் கடலில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைத் தேடுவது தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பிலிப்பீன்ஸ் விருப்பம் காட்டுகிறது. கூடுதலான இடங்களிலிருந்து எரிசக்தியைப் பெற வகைசெய்வது நோக்கம்.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் புளூம்பர்க் செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற நேர்காணலில் இதைத் தெரிவித்தார். தென் சீனக் கடலின் சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுகிறது. அதன் தொடர்பில் சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
இப்போது சீனாவுடன் ஒத்துப்போக பிலிப்பீன்ஸ் முயற்சி செய்கிறது. எனினும், எந்த ஒப்பந்தமும் தமது நாட்டின் சட்டங்களை மீறக்கூடாது என்பதை திரு மார்க்கோஸ் குறிப்பிட்டார்.
முந்தைய பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே, கடந்த ஜூன் மாதம் தென் சீனக் கடலில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைத் தேடுவதன் தொடர்பில் பெய்ஜிங்குடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தார்.
சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் கூடுதல் நெருக்கமான உறவை ஏற்படுத்தப்போவதாக தற்போதைய அதிபர் மார்க்கோஸ் உறுதியளித்துள்ளார்.
எரிசக்தி உள்ளிட்டவற்றை ரஷ்யாவிடமிருந்து வாங்க பிலிப்பீன்ஸ் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. உக்ரேன் போர் தொடர்பில் கவலைகள் இருந்தாலும் பிலிப்பீன்சின் தேசிய நலனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருப்பதாக திரு மார்க்கோஸ் அதே நேர்காணலில் கூறியிருந்தார்.
விலைகளைக் குறைவாக வைத்திருக்க உணவு போன்றவற்றைப் பல்வேறு நாடுகளிலிருந்து பெற பிலிப்பீன்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

