ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பினாங்கு அனைத்துலக விமான நிலையமும் பாதிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் டாக்சி நிறுத்துமிடங்களிலிருந்து வெள்ளம் உள்ளே ஓடியது. நேற்று காலை சுமார் ஒன்பது மணிக்கு விமான நிலையத்திற்குள் வெள்ளம் ஏற்பட்டது.
விமான நிலையத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள முக்கிய நுழைவாயிலில் கணுக்கால் உயரத்திற்கு நீர் சேர்ந்திருந்தது. நேற்று காலை எட்டிலிருந்து 8.50 மணிக்கு இடைப்பட்ட வேளையில் பினாங்கு விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது மூன்று உள்நாட்டு விமானச் சேவைகள் மற்ற விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன.
பினாங்கு அனைத்துலக விமான நிலையம், பாயான் லேப்பாஸ் தொழில்துறை வட்டாரம் ஆகியவற்றுக்குச் செல்லும் முக்கியச் சாலை உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
வெள்ளம் பதிவான காட்சிகளைக் கொண்ட படங்களும் காணொளிகளும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தன.