ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் மாண்ட ஐந்து வயது சிறுவன்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி நிகரின் மேற்குப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த ஓர் ஐந்து வயது சிறுவனின் உடலைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
சிறுவனும் இதர நால்வரும் நேற்று முன்தினம் ஒரு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அந்த வாகனம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டபோது இந்த அவலம் நிகழ்ந்தது.
வாகனத்தில் இருந்த 37 வயது ஆடவர், 28 வயது பெண், ஒரு சிறுவன், சிறுமி ஆகியோர் வாகனத்திலிருந்து தப்பியோடியிருக்கின்றனர். உதவி கிடைக்கும் வரை அவர்கள் ஒரு மரத்தைப் பிடித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிட்னியிலிருந்து ஐந்து மணிநேரத்தில் வாகனத்தில் போகக்கூடிய டுல்லமோர் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
காபூல் பள்ளிவாசலுக்கு அருகே
குண்டுவெடிப்பு; ஏழு பேர் மரணம்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பள்ளிவாசலுக்கு வெளியே நிகழ்ந்த வாகன குண்டுவெடிப்பில் குறைந்தது ஏழு பேர் மாண்டனர். அச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்ற வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குப் பிறகு நேர்ந்ததாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
வாஸிர் அக்பர் பள்ளிவாசலுக்கு வெளியே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று வெடித்தது. அங்கு நடைபெற்ற வெள்ளிக்கிழமை வழிபாட்டில் தாலிபான் அமைப்பினர் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஈரானுடன் தொடர்புகளைக் குறைத்துக்கொள்ளும் உக்ரேன்
கியவ்: ரஷ்யப் படைகளுக்கு வானூர்திகளை வழங்கியதைத் தொடர்ந்து ஈரானுடனான தனது அரசதந்திர தொடர்புகளைக் குறைத்துக்கொள்ளப்போவதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. அச்செயலை 'பொல்லாதவர்களுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட செயல்' என்று உக்ரேன் அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கி வகைப்படுத்தினார்.
பூசலில் இதுவரை ஈரானில் உற்பத்தியான எட்டு ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக திரு ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
ஈரான், ரஷ்யாவுக்கு வானூர்திகளை வழங்குவதாக உக்ரேனும் அமெரிக்காவும் குறைகூறியுள்ளன. டெஹ்ரான் அதை மறுத்து வருகிறது. ரஷ்யாவுக்கு வானூர்திகள் வழங்கப்பட்டதால் ஈரானுக்கும் தனக்கும் இடையிலான இருதரப்பு உறவு பெரிதும் பாதிக்கப்பட்டதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சு கூறியிருந்தது.
உக்ரேனின் ஒடேசா நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் மாண்டதாக கியவ் முன்னதாகத் தெரிவித்தது.

