ரோம்: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக திருவாட்டி ஜியார்ஜியோ மெலோனி (படம்) பதவியேற்கவுள்ளார். இவர் தலைமையில் இத்தாலிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பழைமைவாதக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
இந்தக் கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதன்முறையாக இத்தாலியில் வலதுசாரி அரசாங்கம் அமையவுள்ளது.
இத்தாலிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணிக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிட்டும் என்று தெரியவந்தது. அதனால் அந்நாட்டிற்கு அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் சாத்தியம் உருவாகியுள்ளது.
இத்தாலியில் பல ஆண்டுகளாக அரசியல் நிலைத்தன்மை இல்லாதிருந்தது.
"இது முடிவல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நாளையிலிருந்துதான் நமது ஆற்றலை நிரூபிக்கவேண்டும்," என்று 45 வயது திருவாட்டி மெலோனி நேற்று காலை 'பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி' எனும் தமது கட்சியின் ஆதரவாளர்களிடம் கூறினார்.
திருவாட்டி மெலோனி தலைமையில் ஆட்சி அமைக்கவுள்ள கூட்டணி பல சவால்களை எதிர்நோக்குகிறது. உக்ரேன் போர், பெரிய அளவில் அதிகரிக்கும் எரிசக்தி விலைகள், மீண்டும் மெதுவடைந்துவரும் இத்தாலியப் பொருளியல் வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளைப் புதிய அரசாங்கம் கையாளவேண்டியிருக்கும்.
திருவாட்டி மெலோனியின் அரசாங்கம் 1946ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தாலியின் 68வது அரசாங்கமாக இருக்கும். அடுத்த மாதத்திற்கு முன்பு அவர் பதவி ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை தற்போதைய பிரதமர் மரியோ டிராகி தற்காலிகப் பிரதமராகப் பதவி வகிப்பார். திருவாட்டி மெலோனி, ஒரு காலத்தில் முன்னாள் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் ஆதரவாளராக இருந்தவர்.