விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

3 mins read
d7ffe6c2-9e11-41e0-9da4-a0ae07b4a2f6
-

வெளிநாட்டில் முதுநிலை பட்டக் கல்வி மேற்கொள்ளும் ஃபெங் தியென்வெய்

'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்பில் ஊழியராகச் சேரவிருக்கும் சிங்கப்பூர் மேசைப்பந்து வீராங்கனை ஃபெங் தியென்வெய், அதே நேரத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டக் கல்வியையும் மேற்கொள்ளவிருக்கிறார்.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி பாடம் கற்றல், ஆய்வுப் பிரிவில் இரண்டாண்டு முதுநிலை பட்டக் கல்வியை ஃபெங் மேற்கொள்வார்.

'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்பில் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றவிருக்கும் அவர், வாரந்தோறும் சுமார் 10 மணிநேரம் வேலை செய்வார் என்று அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவுடன் சிங்கப்பூர் சமநிலை

இந்தியாவும் சிங்கப்பூரும் மோதிய நட்புமுறை காற்பந்தாட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிங்கப்பூருக்குத் தனது 17வது கோலைப் போட்டார் இக்சான் ஃபாண்டி (படத்தில் இடது).

முந்தைய ஆட்டத்தில் வியட்னாமிடம் 4-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது சிங்கப்பூர். அதிலிருந்து அணி நன்கு மீண்டு வந்துள்ளதாகச் சொன்னார் பயிற்றுவிப்பாளர் டாக்காயுக்கி நிஷிகாயா.

படம்: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்

கோஹ்லி, சூர்யா சிறப்பான ஆட்டம்; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

ஹைதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணிக்கு அருமையான தொடக்கம் தந்தார் கேமரன் கிரீன். அவர் 21 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசினார்.

பின்னர் மளமளவென விக்கெட்டுகள் விழ, இந்தியாவின் கை ஓங்கியது. ஆயினும், முன்னாள் சிங்கப்பூர் வீரரும் இப்போது ஆஸ்திரேலியா சார்பில் ஆடி வருபவருமான டிம் டேவிட், கடைசி ஓவர்களில் சிக்சர் மழை பொழிய, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களைக் குவித்தது. டேவிட் 54 ஓட்டங்களை விளாசினார்.

இந்தியத் தரப்பில் அக்சர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார். அடுத்து பந்தடித்த இந்திய அணியில் விராத் கோஹ்லி 63 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 69 ஓட்டங்களையும் குவித்தனர். கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார் ஹார்திக் பாண்டியா.

அடுத்ததாக, இந்தியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது. முதல் டி20 போட்டி நாளை 28ஆம் தேதி இரவு இடம்பெறவுள்ளது.

தோல்வியின் விளிம்புவரை சென்றும் தளராது போராடி வென்ற பாகிஸ்தான்

கராச்சி: கடைசி 12 பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி. கைவசம் மூன்று விக்கெட்டுகளும் இருந்தன. இத்தகைய சூழலில் எளிதாக வெற்றியைத் தன்வயப்படுத்தி, தொடரையும் வெல்ல வாய்ப்பிருந்த நிலையில், தோற்றுத் தலைகுனிந்தது இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணி.

பாகிஸ்தான் அணிக்கெதிரான 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று ஓட்டங்களில் வெற்றியைப் பறிகொடுத்தது. முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணிக்கு முகம்மது ரிஸ்வானும் (88) அணித்தலைவர் பாபர் ஆசமும் (36) அருமையான தொடக்கம் அமைத்துத் தர, 20 ஓவர்களில் அவ்வணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைச் சேர்த்தது. அடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

ஆயினும், பென் டக்கெட் (33), ஹேரி புரூக் (34), அணித் தலைவர் மொயீன் அலி (29), லியம் டாசன் (34) ஆகியோர் பொறுப்புடன் ஆட, அவ்வணி வெற்றியை நெருங்கியது. இந்நிலையில், 19வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார் ஹரிஸ் ரௌஃப். தொடர் 2-2 எனச் சமநிலையை எட்டியுள்ளதையடுத்து, வெற்றியாளரை முடிவுசெய்யும் கடைசி, ஐந்தாவது போட்டி நாளை இரவு நடைபெறவிருக்கிறது.