கோலாலம்பூர்: நாற்பதுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அம்னோ தலைவர் அஹமட் ஸாஹித் ஹமிடியை கடந்த வாரம் நீதிமன்றம் விடுவித்தது.
ஆனால் இதனை எதிர்த்து தலைமை சட்ட அலுவலகம் மேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான மனு திங்கள் மாலை 4.40 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டதாக பெயர் தெரிவிக்காத ஒரு தகவல் உறுதிப்படுத்தியது.
சென்ற வெள்ளிக்கிழமை நாற்பது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய முன்னாள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஸாஹித்தை ஷா அலாம் உயர் நீதிமன்றம் விடுவித்தது.
அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி முஹமட் யாஸிட் முஸ்தபா, அடிப்படை ஆதாரங்களை அரசாங்கம் நிரூபிக்கத் தவறி விட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவருக்கு எதிரான மூன்று முக்கிய சாட்சிகள் நம்பகமற்ற முறையில் இருந்ததாகவும் அவர் சொன்னார்.
சீனாவில் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நிலையத்திற்கான அனுமதியை நீட்டிக்கும் ஒப்பந்தத்திற்காக தற்போது 69 வயதாகும் ஸாஹிட் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சி களாக 'அல்ட்ரா கிரானா' என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் டேவிட் டான் சியோங் சன், அதன் முன்னாள் இயக்குநர்கள் ஹேரி லீ வூய் கியூன், வான் குவோரிஸ் ஷா வான் அப்துல் கனி ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
மேலும் சாட்சியாக சமர்ப்பிக்க பற்றுவரவு பதிவேட்டின் நம்பகத்தன்மை குறித்தும் நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியது.
அதில் சில இடங்களில் தகவல்கள் விடுபட்டிருந்தன.
2014, 2017க்கு இடையே அல்ட்ரா கிரானாவிடமிருந்து திரு ஸாஹிட், லஞ்சம் பெற்ற 33 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.
அதன் மொத்த மதிப்பு 13.56 மில்லியன் வெள்ளியாகும். அதே நிறுவனத்திடமிருந்து 3.125 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள
சுவிஸ் ஃபிராங்க், அமெரிக்க டாலராக பெற்ற மேலும் ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இந்த வழக்கிலிருந்து ஸாஹிட் விடுவிக்கப்பட்டாலும் அவரது தனிப்பட்ட தொண்டு நிறுவனம் தொடர்பான நம்பிக்கை மோசடி, ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

