பெய்ஜிங்: தென் சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்ஸென்னில் கொவிட்-19 கட்டுப்பாடு களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டசன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நகரத்தை அதிகாரிகள் முடக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் வெடித்தது.
பெருநகரமான ஷென்ஸென்னில் 18 மில்லியன் பேர் வசிக்கின்றனர். நேற்று பத்து பேர் மட்டும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். இருந்தாலும் மூன்று மாவட்டங்களில் உள்ள மக்கள் வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சீனா, தொற்றுநோய் இல்லாத நாடாக இருக்கும் நோக்கத்தில் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகிறது.
அடுத்த மாதம் பெய்ஜிங்கில் முக்கிய அரசியல் கூட்டம் நடைபெறுவதால் கொள்ளைநோய் பரவலை உடனடியாக தடுத்து நிறுத்தும் கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
இந்த நிலையில் சீனாவின் 'டுவிட்டர்' போன்று செயல்படும் வெய்போ, இன்ஸ்டகிராமில் பரவும் காணொளிகளில் ஒரு சிறு கூட்டம், கொவிட்-19 முடக்கத்தை அகற்ற வேண்டும் என்று முழக்கமிடுவதைக் காண முடிகிறது.
ஒரு காணொளியில் 'காவல் துறையினர் மக்களை தாக்குகின்றனர்' என்று ஒரு பெண் கூறுகிறார்.
ஃபுடியான் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஷாவெய்யில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
சென்ற திங்கட்கிழமை இரவு பத்து மணியிலிருந்து ஷாவெய் சுரங்க நிலையம் மூடப்பட்டது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அது மூடப்பட்டிருக்கும் என்று நகர ரயில் சேவை வழங்கும் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.

