விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து, ஜெர்மனி சமநிலை
லண்டன்: யுயேஃபா நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளன. இந்த A3 பிரிவு ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் கோல் மழை பொழிந்தது. 71வது நிமிடத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனி முன்னணி வகித்தது. 83வது நிமிடத்திற்குள் 3-2 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்றது இங்கிலாந்து.
87வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது. லூக் ஷோ, மேசன் மெளன்ட், ஹேரி கேன் ஆகியோர் இங்கிலாந்தின் கோல்களைப் போட்டனர்.
பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கினார் அணித்தலைவர் கேன். ஜெர்மனியின் கோல்களில் இரண்டைப் போட்டவர் காய் ஹாவர்ட்ஸ். பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி மற்றொரு கோலைப் போட்டார் இல்க்காய் குண்டோகன்.
கடந்த சில வாரங்களாக கோல் போடவே சிரமப்பட்டு வந்த இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் நன்கு மீண்டு வந்தது.
எனினும், இவ்வாண்டு அரங்கேறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகச் செய்ய அந்த அணி நன்கு மேம்படவேண்டும்.
நேஷன்ஸ் லீக் காற்பந்து; இறுதி நான்கு குழுக்களில் இத்தாலி
தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளுக்கு இத்தாலி தகுதி பெறவில்லை என்றாலும், நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இறுதி நான்கு குழுக்களின் வரிசையில் அது இடம்பெற்றுள்ளது அதற்கு ஆறுதலாக அமைந்துள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் அது 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இத்தாலிக்கு கிடைத்துள்ளது.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கோல் போட்ட கியாக்கோமோ ரஸ்பதோரி இத்தாலிக்கான முதல் கோலை போட்டார். ஆட்டத்தின் 27ஆம் நிமிடத்தில் ஹங்கேரி ஆட்டக்காரர் ஒருவர் தமது கோல் காப்பாளரை நோக்கி உதைத்த பந்தை சரியான தருணத்தில் இடைமறித்து ரஸ்பதோரியிடம் கொடுக்க அவரும் அதை கோல் வலைக்குள் செலுத்தினார்.
"உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது ஆறாத புண்ணாக இருந்தபோதும், குழுவினரிடையே காற்பந்து ஆர்வத்தைக் கட்டிக்காக்க, இதுபோன்ற வெற்றி ஆட்டங்கள் தேவை," என்று கருத்துரைத்தார் இத்தாலிய அணியின் கோல்காப்பாளர் கியன்லுக்கி டோனாருமா.
ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் ஹங்கேரி கோல்காப்பாளர் இரண்டு முறை கோல் புகாமல் தடுத்து தமது அணியினரைக் காப்பாற்றினாலும், இரண்டு நிமிடங்கள் கழித்து தனது இரண்டாவது கோலைப் போட்டு வெற்றி வாகை சூடியது இத்தாலி.

